Monday, May 11, 2009

அம்மா.

கவிதை கிறுக்கல்களை போல கல்லூரி நாட்களில் சில சிறுகதைகளை கிருக்கியதுண்டு. எனது பொக்கிஷ டைரியின் பக்கங்களில் இருந்து அவற்றில் ஒன்று.

இந்த கதையின் களம் இன்று வரை relatable ஆக இறப்பதற்கு காரணம் நாட்டு நிலைமையே.

அம்மா.

ஆனந்த் ஆயத்தமாகிக் கொண்டிருந்தான்.
அருகில் அமர்ந்து அவனுக்கு உதவி செய்து கொண்டிருந்தான் பாலு.
இன்னும் ஒரு மணி நேரம் தான் இருக்கிறது ஆனந்திற்கு. இந்த உலகை அவன் காண போவது இந்த ஒரு மணி நேரமே.

நேரம் நெருங்க நெருங்க ஆனந்திற்கு வியர்த்தது.
அவனது வியர்வையின் விருத்தியைக் கண்ட பளு

"என்னடா பயம் வந்துடுச்சா?"

"இல்லை".சட்டென சற்று கோவத்துடன் மறுத்தான் ஆனந்த்.

அவனே தொடர்ந்தான்.

"பயம் எல்லாம் ஒண்ணுமில்லை. காரியம் நடக்கும். நானும் மனுஷன் தான். எனக்குள்ள உணர்வுகள் எல்லாம் இந்த ஒரு மணி நேரம் தான். அதை நான் தடுக்க விரும்பவில்லை "

நாலு நிதானமாய் "உன்னுடைய உணர்வுகள் உன்னை பலவீனப்படுத்தும். அவற்றை விட்டொழி. சிந்தனையை காரியத்தில் மட்டும் செலுத்து" என்றான்.கிட்டதட்ட அது ஒரு ஆணையே.

ஆனந்த் மெல்ல தலையாட்டினான்.

பாலு மேலும் " காரியத்திற்கு நீ தேர்ந்தெடுக்கப்பட்டது உன் அதிர்ஷ்டம். இதை நீ ஒரு புண்ணிய யாத்திரையாக நினைக்க வேண்டும்"

பேசிக்கொண்டே எழுந்த பாலு "நான் போயி வண்டிய எடுத்திட்டு வர்றேன்.இன்னும் அரை மணி நேரத்தில் நாம் புறப்படணும் "என்று அங்கிருந்து நகர்ந்தான்.

ஆனந்த் காரியத்தில் சிந்தையை செலுத்தி ஆயத்தமானான்.

காரியம், சரியாக 12 மணிக்கு அருகில் உள்ள மைதானத்தில் நடக்கும் மத கூட்டம் ஒன்றில் மக்களோடு மக்களாய் ஆனந்த் கலந்து சென்று தன உடம்பில் உள்ள சக்தி வாய்ந்த வெடி குண்டுகளை வெடிக்க செய்வது.

எப்படியும் நூறு பேரையாவது கொல்வது என்பது இலக்கு. சீட்டு போட்டு ஆனந்த் மனித குண்டாய் மாருவதென முடிவு எடுக்க பட்டது.

அப்பா இல்லாத, அம்மாவையும் இரண்டு அக்காவையும் கொண்ட தன குடும்பத்தை காக்க பலவாறாய் கஷ்டபட்டு கடைசியில் ஆனந்த் கொண்டது தீவிரவாதம். தீவிரவாதம் செய்தே தன குடும்பத்தை காத்து வந்தான். காரியம் முடிந்த பின் அவன் குடும்பத்துக்கும் ஒரு பெரிய தொகை சென்றடைய ஏற்பாடுகள் செய்யபட்டுவிட்டன.

இந்த காரியத்தின் மூலம் குறிபிட்ட அந்த மதத்திற்கு பாடம் புகட்டுவதே இவர்கள் நோக்கம். உயிர்பலி கொடுத்தேனும் தங்கள் மதத்தின் மேண்மையை உணர்த்த செய்யும் முரணான முரட்டுத்தனம் இது. இஷ்டமில்லாமல் தான் ஆனந்த் இந்த கூட்டத்தில் சேர்ந்தான். ஆனால் இன்று அவனும் இரக்கமில்லா, இறுக்கமான மனிதனாகிவிட்டான். காரியத்திற்கு வண்டியில் புறப்பட தயாராகிவிட்டுருந்தான்.

ஒரு அம்பாசடர் கார் வந்து நின்றது.

"போகலாம்" என்றான் பாலு இறங்காமலே. கதவை திறந்து விட்டான்.

திடீர் என எதோ ஒரு உணர்வு கவ்வ மெல்ல அடி எடுத்து வைத்தான் ஆனந்த்.

மறுபடியும் ஏதோ எண்ணம் வலுத்து கவ்வ , அவன் நாசிகள் விரிந்தது. கண்களை மிக சுருக்கி கைகள் நாசி நோக்கி தன்னாலே போக வாய் வரை கைகள் வந்த போதே ஹ ஹி ஹி என்று ஒரு சிறு ராகம் பாடி, "அம்மா" என்று பெரும் தும்மலை தும்மினான்.

சட்டென நெஞ்சுக்குள் விம்மினான். கலங்கினான். காருக்குள் ஏற தயங்கினான்.

அவனது தயக்கம் கண்ட பாலு "என்ன தும்மல்?சகுனம் சரி இல்லையா? ஏதாவது தடங்கல் வந்திடுமோ? எல்லாம் சரியாய் பண்ணி விட்டே தானே?" என்று கேள்விகளை அடுக்கினான்.

பின் அவனே "சரி எல்லாம் நல்ல படியா தான் நடக்கும் . நீ ஏறு " என்றான்.

காருக்குள் ஜடம் போல் ஏறினான்.

அந்த தும்மல் அவனை ரொம்ப பாதித்தது.

தும்மிய போது அவன் உதிர்த்த அம்மா என்னும் பிடிமானம் அவனை உறுத்தியது.

வண்டி நகர அவன் மனதில் அலைகள் ஓடியது.

"அம்மா". என்ன ஒரு அழகான ஜீவன்.

என்னையறியாமல் வரும் தும்மல், அது சிறு நொடிப்பொழுதே ஆகிடினும் அதற்கு கூட ஏன் தாயின் பிடிமானம் தேவை படுகிறது.

ஆனந்த் தன் தாயை பற்றி சிந்திக்கலானான்.

இரண்டு பெண் குழைந்தைகளுக்கு பிறகு, பிறக்கும் முன்பே தந்தையை கொன்று விட்டது என்றும், பிறக்க போவதும் பெட்டையாகிடின் கஷ்டம் என்றும் தன் கருவை கலைக்க சொன்னவர்களை சட்டை செய்யாது என்னை பெற்றெடுத்தவள்.

அம்மாவின் வாதம், ஏன் குழந்தையோ எந்த குழந்தையோ சாவதற்கு என்று பிறப்பதில்லை. அவரவர் பயனுடனே உயிரினம் பிறக்கும் இப்பூமியில்.

அதன் பின் உறவுகள் உதவ மறுத்து,ஊர் விட்டு, எத்தனையோ போராட்டங்களுடனே வளர்த்தாள் மூவரையும். இத்தனை போராட்டங்களிலும் மாறாதது அம்மாவின் கனிவு மனம். அம்மா பார்த்த தொழில் வழி வழியாய் கற்றுக்கொண்ட மருத்துவச்சி தொழில். அம்மாவின் பத்திய மருந்து வாங்கி போய் குணம் அடைந்தவர்கள் ஆனந்தமாய் சொல்வதுண்டு "உங்க கையிலே மந்திர சக்தி இருக்கும்மா. அது தான் எல்லா உயிரையும் காப்பாத்துது. " அம்மாவிடமிருந்து ஒரு புன்னகையே பதிலாய் வரும்.

அம்மா தன்னிடம் பத்திய மருந்து வாங்குவரிடை பேதம் பார்ப்பதில்லை என்றுமே. ஒரு முறை பக்கத்து தெரு வேசி கேட்க பத்தியம் அரைத்து கொடுத்தாள். கோவத்தில் பேசிய என்னிடம் " அவ தொழில் அது. ஏன் தொழில் இது. இந்த உலகில் பிறக்கும் எந்த உயிர்க்கும் வாழும் முறையை தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ளது. அவரவர் முறைகளுக்கான பயன்களையும் அவரே பெறுவர். எம்முறையில் வாழ்ந்தாலும் பிற உயிர்களை வதைக்கும் உரிமை மட்டும் யாருக்கும் சொந்தமில்லை. அப்பெண்ணுக்கு பத்தியம் செய்யாவிட்டால் அவளை வேதனையில் உழள விட்ட பாவத்தை செய்தவளாவேன். அந்த ஒரு பாவம் போதும் நான் வாழ்நாள் முழுக்க துன்புற்றிருக்க. இதை கூட ஒரு மருத்துவச்சியாக பேச வில்லை. சாதரண அன்புள்ளம் கொண்ட மனுஷியாக தான் பேசுகிறேன். நீயும் யார் மீதும் காழ்ப்புணர்ச்சி கொள்ளாதே. இந்த பூமி தழைக்க தேவை அளவில்லா அன்பு " என்றாள்.

எண்ணங்கள் அலை அலையாய் ஓட, உடம்போ அருவியென வியர்த்திருந்தது ஆனந்திற்கு. மனதிற்குள் ஆயிரம் அம்புகள் தைத்துக் கொண்டிருந்தது. தன்னையறியாமல் "நிறுத்துங்க வண்டியை" என்று அலறினான்.

படக்ட்டதுடன் பக்கத்திலிருந்த பாலு "ஏன்? என்ன ஆச்சு? "என்றான்.

வண்டியும் நின்றது.

"என்னால் முடியாது " என்றான் ஆனந்த்.

"முட்டாள் மாதிரி பேசாதே. வாழ்வின் பயனை அடையும் தருணத்தை அடைந்து கொண்டிருக்கிறாய் நீ. இது என்ன முட்டாள் தனமான முடிவு " என்றான்.

"இல்லை என்னால் முடியவே முடியாது "என்றான்.

கோவத்துடன் பாலு "கடமையுணர்ச்சி இன்றி பேசாதே" என்றான்.

"இல்லை கடமையுணர்ச்சி இருப்பதால் தான் இந்த முடிவு"

"என்ன கடமையுணர்ச்சி ?" என்றான் பாலு.

"கருணையின் வடிவாம் தாயின் மூலம் இம்மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்க வேண்டிய கடமையுணர்ச்சி" என்று கூறி காரிலிரிந்து இறங்கி நடந்தான் ஆனந்த்.

No comments: